கல்வி மந்திரி பிரசங்கம். குடி அரசு - துணைத் தலையங்கம் - 14.08.1932 

Rate this item
(0 votes)

சென்ற 4-8-32ல் நடந்த சென்னைச் சர்வகலா சாலைப் பட்டமளிப்பு விழாவின் போது நமது மாகாண கல்வி மந்திரி திவான் பகதூர் எஸ். குமாரசாமி ரெட்டியார் அவர்கள் பட்டதாரிகளுக்குச் செய்தப் பிரசங்கம் மிகவும் சிறந்த தொன்றாகும். அவர் தற்காலக் கல்வியில் உள்ள குற்றங்களையும், கல்வியின் லட்சியம் இன்னதென்பதையும், கல்வி எம்முறையில் போதிக்கப்பட வேண்டு மென்பதையும், எத்தகைய கல்வி அவசியமென்பதையும், கற்றவர்கள் செய்ய வேண்டிய வேலையையும் தெள்ளத்தெளிய விளக்கிக் காட்டியிருக்கிறார். 

கல்வியானது உலக வாழ்க்கைக்குப் பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும். வெறும் வித்தையை மாத்திரம் கற்றுக் கொடுப்பதனால் தேச மக்களின் துன்பத்தைப் போக்க முடியாது. ஆகையால் தொழில் கல்வியை வளர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்னும் அபிப்பிராயத்தை வெளியிட்டிருக்கிறார். 

அன்றியும் தற்காலத்தில் உயர்தரக் கல்விக்கு அதிகமாக செலவு செய்வதைக் காட்டிலும், ஆரம்பக் கல்வியின் பொருட்டு அதிக கவனம் செலுத்த வேண்டும்; ஆரம்பக்கல்வியின் மூலம் தேசமக்கள் எல்லோரையும் அறிவுடையராக்க முயல வேண்டும் என்னும் சிறந்த அபிப்பிராயமும் கல்வி மந்திரியின் பிரசங்கத்தில் காணப்படுகிறது. 

நமது நாட்டு மாணவர்களுக்குத் தற்சமயம் எல்லா விஷயங்களையும் ஆங்கிலத்தின் மூலமே கற்பிக்கப் படுவதானால் விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கு அதிக நாளாகிறது. ஆங்கில பாஷையைத் தவிர மற்ற விஷயங் களைத் தாய்மொழியின் மூலம் கற்பிக்கப்பட்டால் குறைந்த காலத்திலும் சுருங்கிய செலவிலும் கற்கக் கூடும். ஆகையால் இவ்வாறு கற்பிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்று சில காலமாகக் கல்வித் துறையில் உழைத்துவருவோர் சிலர் பிரயாசைப்பட்டு வருகின்றனர். நமது கல்வி மந்திரியவர்கள் இவ்வபிப்பிராயத்தை வற்புறுத்தி தாய்மொழிக் கல்வியின் அவசியத்தை எடுத்துக்காட்டிப் பேசியிருப்பது கவனிக்கத்தக்க தாகும். 

தற்பொழுது தேசீயவாதிகளில் பலர், ஆங்கில பாஷையின் மீதும் வெறுப்புக்கொண்டு, அதற்குப் பதிலாக "ஹிந்தி' பாஷையை இந்தியாவிற்குப் பொதுப்பாஷையாக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகின்றனர். வட நாட்டார். தங்கள் பாஷையின் மேல் உள்ள அபிமானம் காரணமாக ஆரம்பித்த இம்முயற்சியைத் தென்னாட்டில் உள்ள தமிழ் மொழியின் மேல் வெறுப்புக் கொண்ட பார்ப்பனர்களும் ஒப்புக் கொண்டு இதன் பொருட்டுப் பெரும் முயற்சி செய்துவருகிறார்கள். ஆனால் நாம் ஆதிமுதல் 'ஹிந்தி' பொது மொழியாவதற்குத் தகுதி உடையதன்று என்று சொல்லிவருகிறோம். ஹிந்தி மொழியில் விஞ்ஞானக் கலைகள் ஒன்றேனும் இல்லையென்பதையும், இலக்கியங்கள் இல்லையென்பதையும், தமிழர்க்கு கஷ்டமான மொழி என்பதையும், ஆங்கிலத்தை அன்னிய மொழியென்றால் ஹிந்தியும் அன்னிய மொழிதான் என்பதையும், ஹிந்தியைப் பொது மொழியாக்க வேண்டுமென்றால் முஸ்லீம்கள் உருதுவைப் பொதுமொழியாக்க வேண்டு மென்கிறார்களாதலால் இதன் மூலம் இந்து - முஸ்லீம் கலகம் நேரும் என்பதை யும் அறிந்தவர்கள் நாம் சொல்லுவதை ஒப்புக் கொள்ளாமல் இருக்கமாட்டார் களென்பது நிச்சயம். ஆதலால் தற்காலத்தில் அதிகமான மக்களால் பேசப் படுவதும், உலகம் முழுவதும் பரவியிருப்பதும், எல்லாக் கலைகளும் நிரம்பி யிருப்பதும் ஆகிய ஆங்கிலத்தையே பொது மொழியாக வைக்க வேண்டும் என்றும் கூறிவருகின்றோம். கல்வி மந்திரியவர்களும் ஆங்கிலமே பொது மொழியாக இருக்க வேண்டும் என்று தமது பிரசங்கத்தில் குறிப்பிட்டிருப் பதை நாம் பாராட்டுகிறோம். 

கல்வியானது. கற்றவர்களுக்குப் பகுத்தறிவை உண்டாக்கக் கூடிய தாகவும், பழய குருட்டுப் பழக்க வழக்கங்களைப் போக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டுமென்றும். இதற்கேற்ற முறையில் கல்வியைத் திருத்தி அமைக்க வேண்டுமென்றும் நாம் கூறிவருகிறோம். இவ்வபிப்பிராயமும் கல்வி மந்திரியின் பிரசங்கத்தில் காணப்படுகின்றது. 

கற்றவர்கள் உத்தியோகத்திற்கென்று கற்காமல், அறிவுக்கென்றும், நாட்டின் நன்மைக்கென்றும் கற்று, தேசமக்களைச் சீர்திருத்த வேண்டும் என்னும் அபிப்பிராயத்தையும் வெளியிட்டிருக்கிறார்கள். கற்றவர்களெல்லாம், கிராமப் புனருத்தாரண வேலையில் ஈடுபட்டு கிராமாந்தரங்களையும் அங்குள்ள மக்களையும் சீர்திருத்த முயல வேண்டும் என்றும், இதுவே தேசிய வேலையும், தேசீய நோக்கமும் ஆகும் என்றும் குறிப்பிட்டிருப்பது நமது நாட்டுக் கல்விமான்களால் கவனிக்கக் கூடியதொன்றாகும். 

தற்பொழுது கற்றவர் கூட்டம், தேசமக்களின் முன்னேற்றத்தில் சிறிதும் கவலையில்லாமல் தங்கள் சுயநலம் ஒன்றையே கருதி உத்தியோகம் ஒன் றையே நாடித்திரிந்து கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் கல்விமுறை என்பதில் ஐயமில்லை. ஆகையால், இனியாவது கவ்விமுறை சீர்திருத்தப் பட்டு நாட்டின் முன்னேற்றத்துக்கு உபயோகத்திற்கு ஏற்ற முறையில் கற்பிக் கப்படுவதற்கு முயற்சி செய்யுமாறு வேண்டுகிறோம். இறுதியாக இத்தகைய சிறந்த அபிப்பிராயங்களைத் தைரியத்தோடு வெளியிட்ட திரு. ரெட்டியார் அவர்களைப் பாராட்டுகிறோம். 

குடி அரசு - துணைத் தலையங்கம் - 14.08.1932

 
Read 67 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.